search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரைச்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி- கிராம மக்கள் பாராட்டு
    X

    50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரைச்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி- கிராம மக்கள் பாராட்டு

    • கனரக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
    • அரசின் இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம் கிராமத்தில் செட்டி தோட்டம் என்ற பகுதியில் இருந்து புதுக்கரைப்புதூர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான இணைப்பு சாலை ஒன்று உள்ளது.

    இந்த சாலையானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோபி, கவுந்தப்பாடி ஊர்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மைசூரில் இருந்து ஈரோட்டிற்கு குதிரைகளில் கடிதங்களை எடுத்து செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டதால் குதிரைச்சாலை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

    காலப்போக்கில் இந்த சாலையின் பயன்பாடு குறைந்து விவசாய நிலங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலையின் அகலமும் குறைந்து விட்டது.

    இதனால் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பொம்மநாயக்கன்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகத்தரசு, பாண்டியாறு மோயாறு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் அப்பகுதி மக்களிடம் சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் வருவாய்துறை ஆவணங்களின் அடிப்படையில் எல்லைகள் அளவீடு செய்து கற்கள் நடுவது என்றும், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டன.

    30 அடி முதல் 60 அடி அகலம் கொண்டதாக சாலை உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் ரூ.60 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×