search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த வக்கீல் நெஞ்சுவலியால் மரணம்
    X

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த வக்கீல் நெஞ்சுவலியால் மரணம்

    • அரசு பஸ்சில் பயணம் செய்த ஐகோர்ட்டு வக்கீல் நெஞ்சுவலி ஏற்பட்டு பஸ்சின் இருக்கையிலேயே இறந்தார்.
    • விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரை சேர்ந்தவர் ரவி ஆனந்த் (வயது 45).இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பஸ்சில் சென்று விட்டு நேற்று இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன் டிரைவராகவும், ராமநாதபுரம் எஸ்.வி.மங்கலமத்தை சேர்ந்த சந்திரமோகன் கண்டக்டராகவும் இருந்தனர். அரசு பஸ் இன்று அதிகாலை 5.45 மணிக்குவிக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு ஓட்டலில் நின்றது.

    பஸ்சில் பயணம் செய்த அனைவரும் இறங்கி சென்றனர். ரவி ஆனந்தும் பஸ்சில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பஸ்சில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தார். 5.55 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்களிடம் நெஞ்சு வலி உள்ளதாக கூறியுள்ளார்.

    உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்தவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விக்கிரவாண்டி போலீஸ்காரர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ரவி ஆனந்த் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நெஞ்சுவலியால் இறந்தவரின் மனைவி வினித்ரா சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×