என் மலர்
உள்ளூர் செய்திகள்

சந்தைக்கு சென்று விட்டு மகனுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
- கொள்ளையன் சுமார் 3 பவுன் மதிப்புள்ள பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றான்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எம்.டி.என்.புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சாந்தி (46). இவர் நேற்று மாலை கல்லூரி மாணவரான தனது மகனுடன் மொபட்டில் சென்னிமலை வாரசந்தைக்கு வந்தார். அங்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 7 மணி அளவில் தனது ஊருக்கு புறப்பட்டார். அவர்கள் சென்னிமலை-ஊத்துக்குளி ரோடு தொட்டம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மொபட்டில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென சாந்தி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட சாந்தி நகையை பிடித்துக் கொண்டு கொள்ளையனுடன் போராடினார்.
இதில் அவர் கீழே தவறி விழுந்தார். அந்த நேரத்தில் கொள்ளையன் சுமார் 3 பவுன் மதிப்புள்ள பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றான். கீழே விழுந்ததில் காயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.






