search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவ கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி
    X

    அரசு மருத்துவ கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி

    • மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். இடங்களுக்கு 4 கட்டமாக ஆன்லைன் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் 2 முறை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தியது. அதன்பிறகும் தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) ஒரு இடம், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் ஒரு இடம், மதுரை, தஞ்சாவூர், கரூர், அரியலூர் ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு கலந்தாய்வு முடிந்தபிறகும் காலியாக இருக்கின்றன.

    இந்த ஆண்டு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 800 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கியது. 15 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட அந்த இடங்களுக்கு டெல்லியில் உள்ள பொது சுகாதார பணிகள் இயக்ககம் கலந்தாய்வு நடத்தி முடித்துள்ளது.

    டிசம்பர் 29-ந்தேதியுடன் மருத்துவ கலந்தாய்வு முடிவுக்கு வந்தன. அதன் பிறகும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 6 பேர் அந்த இடங்களில் சேரவில்லை. அவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர்கள்.

    அவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் பங்கேற்று இடங்களை தேர்வு செய்து பின்னர் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்துள்ளனர். இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

    2020 வரை 2 கட்ட அகில இந்திய கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு காலி இடங்கள் மாநில அரசிடம் சரண்டர் செய்வது இல்லை.

    கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 24 இடங்கள் காலியாக இருந்தன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் காலியாக இருந்த அந்த இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியும் கோர்ட்டு மூலம் அணுகியும் வாய்ப்பை பெற்றது.

    மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கொள்கையை மாற்ற வேண்டும் என்றும், இதனால் அந்த இடங்கள் கடைசி வரை காலியாகவே போய்விடுவதால் மருத்துவ கனவுகளுடன் வந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது என்று கல்வியாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.

    இதுபற்றி மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், எல்லாம் நிரம்பி விட்டன. இது குறித்து வேறு எதையும் கூற இயலாது' என்றார்.

    Next Story
    ×