search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரண்டே நாளில்  52,000 பேர் விண்ணப்பம் - அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
    X

    இரண்டே நாளில் 52,000 பேர் விண்ணப்பம் - அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்

    • வருகிற 25-ந்தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கட்ஆப் தயாரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.
    • 25-ந்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பில் சேருவதற்கான முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் தவிர கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 1593 உள்ளன. அரசு கலைக்கல்லூரிகள் மட்டும் 164 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான பதிவு தொடங்கியது.

    தொடங்கிய முதல் நாளில் மட்டுமே 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 2-வது நாளான நேற்று வரை 52 ஆயிரம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    வருகிற 25-ந்தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கட்ஆப் தயாரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். 25-ந்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

    கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகளிடம் இந்த ஆண்டும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக பெரும்பாலான மாணவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.

    இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வழக்கம்போல பி.காம்.., படிப்பதற்கான மோகம் குறையவில்லை. டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிகளவில் இருப்பதால் பி.காம். பாட பிரிவுக்கு கடும் போட்டி நிலவக்கூடும். இதையடுத்து பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.ஏ. போன்ற பட்டப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டு 2.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த வருடம் இது மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சென்னையில் ஆலோசனை மையம் தொடங்கப்பட உள்ளது.

    மாணவர்கள் கல்லூரிகளில் சேருவது தொடர்பான விளக்கங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுதவிர டேட்டா சென்டரும் விரைவில் தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு அரசு கலை கல்லூரிகள் பற்றிய வரலாறு, தகவல்கள் சேகரித்து தொகுப்பாக இதன்மூலம் பாதுகாக்கப்பட உள்ளது.

    Next Story
    ×