search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் 3 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
    X

    மின் கட்டண உயர்வை குறைக்க கோரி ஈரோடு வில்லரசம்பட்டியில் தொழிற்சாலை முன்பு கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் 3 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

    • ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    • தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ள மின்கட்டணத்தை குறைக்க கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மேலும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது.

    இந்நிலையில் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

    இதன்பேரில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப்பெற வேண்டும்.

    சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். "மல்டி இயர் டேரிப்" -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நிர்வாகிகள் கருப்பு அட்டை அணிந்து ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.

    Next Story
    ×