search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் தயார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் தயார்

    • பாம்பன் புதிய தூக்கு பாலம் 70 மீட்டர் நீளத்தில், 500 டன் எடையுடன் கூடியதாக இருக்கும்.
    • பாம்பன் பழைய பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலம், இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் தன்மை உடையது.

    தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில், பாம்பன் கடலுக்கு நடுவே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்பு ரெயில் பாலம் உள்ளது. இதன் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் கடலுக்கு நடுவே மேலும் ஒரு புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. இதற்காக 269 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

    பாம்பன் பழைய பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலம், இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் தன்மை உடையது. இதன் வாயிலாக அங்கு கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் தற்போது கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய பாலத்தின் நடுவே, செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கடலின் நடுவே பெரிய கப்பல் போக்குவரத்து நடத்த முடியும்.

    பாம்பன் கடலுக்குள் மொத்தம் 101 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 20 மீட்டர் நீளம், 30 டன் எடை உடைய 77 கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 65 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. இன்னும் பத்து நாட்களில் மீதமுள்ள 12 கர்டர்கள் பொருத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாம்பன் புதிய தூக்கு பாலம் 70 மீட்டர் நீளத்தில், 500 டன் எடையுடன் கூடியதாக இருக்கும். அவற்றை ஒருங்கிணைந்து இயக்க வசதியாக, பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஆப்பரேட்டர் அறை, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் மின் கேபிள்கள் வைப்பறைகள் ஆகியவை இடம் பெற்று இருக்கும். பாம்பன் புதிய தூக்கு பாலத்தின் கட்டுமான முன்னோட்ட பணிகள், சத்திரக்குடி இரும்பு கட்டுமான தொழிற்சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாம்பன் கடலின் நடுப்பகுதியில் செங்குத்தான தூக்கு பாலம் வேலை முடிந்த பிறகு, அங்கு மீதம் உள்ள 22 கர்டர்கள் பொருத்தப்படும் என்று தெரிகிறது.

    பாம்பன் புதிய பாலத்துக்கான ஆரம்ப கட்ட திட்ட மதிப்பீடு ரூ.269 கோடியாக இருந்தது. அதன் பிறகு கட்டுமான பொருட்கள் விலையேற்றம் காரணமாக, தென்னக ரெயில்வே மேலும் ரூ. 113 கோடி ஒதுக்கீடு செய்தது. இருந்த போதிலும் அங்கு பணிகளை இறுதி செய்ய, மேலும் 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான திட்டமதிப்பீடு, ஏற்கனவே ரெயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவும் கூடிய விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், "பாம்பன் பாலத்தில் 70 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. மீதம் உள்ள பணிகள், ஜனவரி மாதத்துக்குள் முடிவடையும். எனவே பாம்பன் புதிய பாலம், அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×