search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் மழைக்கு 2 மூதாட்டிகள் பலி
    X

    ஈரோட்டில் மழைக்கு 2 மூதாட்டிகள் பலி

    • தொடர்ந்து 30 நிமிடம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஈரோட்டில் மழைக்கு ஒரே நாளில் இரண்டு மூதாட்டி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    மாலை 5 மணியளவில் வானம் கரும் மேகங்கள் சூழ மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 30 நிமிடம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த மழை காரணமாக 2 மூதாட்டிகள் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த ராயபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவரது மனைவி துளசியம்மாள்(65). இவரது மகள் பருவதம். நேற்று மாலை நசியனூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.

    மாலை சுமார் 5.30 மணிக்கு துளசியம்மாள் பூசாரி காட்டிலுள்ள ஆட்டு கொட்டாயில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மழையின் காரணமாக அவருடைய ஆட்டுக்கொட்டாயில் ஓரமாக ஒதுங்கி நின்றார். அப்போது மழையுடன் சூறாவளி காற்று வேகமாக வீசியதால் கொட்டாய் திடீரென சாய்ந்து விழுந்தது. இதில் துளசியம்மாள் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்துவிட்டார்.

    அவரது கணவர் கண்ணுச்சாமிக்கு வலது கால் பெருவிரலில் அடியும் மகள் பருவதத்திற்கு வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. மேலும்

    மழைக்கு ஒதுங்கிய அதே பகுதியை சேர்ந்த சம்பூர்ணம் மற்றும் ராசம்மா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். மேலும் துளசியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதேபோல் ஈரோடு மேல் திண்டல், கார்கில் தெருவைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவருடைய மனைவி சரஸ்வதி (62). நேற்று மாலை திண்டல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது சரஸ்வதி வீட்டுக்கு அருகே இருந்த தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். கனமழை காரணமாக சரஸ்வதி அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கி நன்றார். பலத்த காற்று காரணமாக திடீரென அந்த மரம் சரிந்து மூதாட்டி சரஸ்வதி மீது விழுந்தது. இதில் மூதாட்டி சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் சரஸ்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஈரோட்டில் மழைக்கு ஒரே நாளில் இரண்டு மூதாட்டி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×