search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இருந்து இன்று இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2-ம் கட்டமாக ரூ.67.7 கோடி மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் இன்று புறப்பட்டு சென்றது.
    • இந்த கப்பலில் 14 ஆயித்து 700 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருத்துவ பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த மாதம் 18-ந்தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பொட்டலமிடும் பணி முடிவடைந்தது.

    இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2-ம் கட்டமாக ரூ.67.7 கோடி மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் இன்று புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 14 ஆயித்து 700 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருத்துவ பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.

    இந்த கப்பலை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, துறைமுக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில நாட்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

    Next Story
    ×