என் மலர்
உள்ளூர் செய்திகள்
100க்கு 97 மதிப்பெண்கள் எடுத்த மூதாட்டி- 108 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டியது எப்படி? மனம் திறந்த பேட்டி
- அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி தொடர்கல்வி முயற்சியை கேரளா தொடங்கியது.
- தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது போலவே கேரள மாநிலத்தில் சம்பூர்ணா சாஸ்த்ரா என்ற எழுத்தறிவு திட்டம்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (வயது 108). இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிழைப்பிற்காக கேரள மாநிலம் வண்டன்மேடு பகுதிக்கு சென்று அங்குள்ள ஏலத்தோட்டத்தில் வேலைசெய்து வருகிறார். இவருக்கு 5 குழந்தைகள். கணவர் இறந்துவிட்ட பிறகு 2 மகன், 3 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
தற்போதும் இவர் பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் என 5 தலைமுறைகளை கடந்தும் தோட்ட வேலைக்கு சென்று வருகிறார். 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கமலக்கன்னிக்கு தன்னால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்துள்ளது. தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று இன்னும் தனது குழந்தைகளை வசதியாக வாழ வைத்திருக்கலாம் என ஏக்கத்துடன் உறவினர்களிடம் கூறிவந்துள்ளார்.
இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் கேரள மாநிலம் முதன்மையான மாநிலமாக உள்ளது. இங்குள்ள வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய எழுத்தறிவு மற்றும் தொடர் கல்வி திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி தொடர்கல்வி முயற்சியை கேரளா தொடங்கியது.
தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது போலவே கேரள மாநிலத்தில் சம்பூர்ணா சாஸ்த்ரா என்ற எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத்துப்பயிற்சி மற்றும் கையெழுத்து பயிற்சி, வாசிக்கும் திறன் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் கமலக்கன்னி போன்ற வயது முதிர்ந்தவர்களும் சேர்ந்தனர். இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கல்வியின் மீது கொண்ட தீராத பற்றால் தொடர்ந்து பயின்று சாதனை படைத்துள்ளார்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்று வழங்கப்படும். அந்த வகையில் கமலக்கன்னி தேர்வில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றார். இந்த திட்டத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்த மூதாட்டியை பஞ்சாயத்து நிர்வாகமும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்ததால் தமிழும், மலையாளமும் சேர்ந்து படித்து 2 மொழிகளிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து கமலக்கன்னி தெரிவிக்கையில்,
எனது பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பி 2ம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். நான் படிக்கும் காலத்தில் பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லவேண்டும். மேலும் குடும்ப வறுமையால் பள்ளிக்கு உணவு கொண்டுசெல்ல முடியாது. இதனால் எப்போதாவது பள்ளிக்கு செல்வோம். பின்னர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டோம். என்னை போலவே என்னுடன் பிறந்தவர்களும் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனால் 15 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தது.
அதன் பிறகு படிப்பை பற்றி சிந்திக்க நேரமில்லை. இருந்த போதும் எனது குழந்தைகள், பேரன், பேத்திகள் அனைவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்று பயின்றனர். அப்போதுதான் நம்மால் இதுபோல் படிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தது. கல்வி கற்காவிட்டாலும் கேள்வி ஞானம் உள்ளது. தற்போது 108 வயது ஆனபோதிலும் எனது வேலைகளை நானே செய்துகொள்கிறேன். கண்ணாடி அணிவது கிடையாது. எனது குழந்தைகள் என்னை நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லையே என்ற குறையை போக்க கேரள அரசு அறிவித்த சம்பூர்ணா சாஸ்த்ரா திட்டம் எனக்கு உதவியாக இருந்தது.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கிடைக்கும் நேரத்தில் கல்வி கற்றுக்கொள்ளலாம். நம்முடைய இருப்பிடத்திற்கே வந்து சொல்லிக் கொடுப்பார்கள். எனது ஆர்வத்தை பார்த்து எனக்கு தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும், மலையாளத்தில் உள்ள எழுத்துக்களும் கற்றுத்தரப்பட்டன. அதன் பிறகு சொற்களை எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் எனது பெயரை எழுத கற்றுக்கொடுத்தனர். பலஆண்டுகளாக ஏலத்தோட்டத்தில் கைரேகை வைத்து சம்பளம் வாங்கிய நான் முதன்முதலாக கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கியபோது அதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தற்போது சரளமாக படிக்க முடியாவிட்டாலும் எழுத்துக்களை மெதுவாக கூட்டி படித்து வருகிறேன். இதனை தொடர்ந்து 2ம் கட்ட தேர்வு நடத்துவார்கள். அதிலும் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என நம்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கு ஏற்ற சூழல் இருந்தபோதும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புகின்றனர். ஆனால் எங்களது காலத்தில் பள்ளிக்கு செல்வதே போராட்டமாக இருக்கும். இன்று கல்விக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதனை குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெற்றோர்களும் படிக்கும் காலத்தில் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் கல்வி கற்க அனுதிக்க வேண்டும். அவர்கள் படித்தால் உங்களுக்கும், அவர்கள் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும். நான் எடுத்த மதிப்பெண்ணை வைத்து பல்வேறு அதிகாரிகள் என்னை பாராட்டி வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் படிப்பதற்கு இது உதவியாக உள்ளது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையார் கூறினார். ஆனால் அதுபோன்ற நிலை எனக்கு ஏற்படவில்லை. அரசே கல்வி கொடுத்து நன்றாக படித்ததற்காக பாராட்டு சான்றும் வழங்கியுள்ளது என்றார்.








