என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரம்- பழனி இடையே 4 வழிச்சாலை பணிகள் நடைபெற உள்ள பகுதி.
பழனி-ஒட்டன்சத்திரம் இடையே 4 வழிச்சாலை திட்ட பணிக்கு மத்திய அரசு ரூ.172 கோடி ஒதுக்கீடு
- பழனி- ஒட்டன்சத்திரம் இடையே 18 கி.மீ. தூரம் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.172 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- 1½ ஆண்டுகளில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
பழனி- ஒட்டன்சத்திரம் இடையே 18 கி.மீ. தூரம் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.172 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு விடுமுறை , விசேஷ நாட்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். மேலும் தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் லட்ச கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
எனவே பழனிக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு முக்கிய சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதனையடுத்து கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி ஒட்டன்சத்திரம் - பழனி வரை 18 கி.மீ. தூரம் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு ரூ. 172.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்கனவே பொள்ளாச்சியில் இருந்து பழனி வரையும், திண்டுக்கல் காமலாபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரையிலும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதே போன்று பழனி - ஒட்டன்சத்திரம் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தால் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். பயண தூரமும் குறையும். இத்திட்டத்துக்காக 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை 16.50 மீட்டராக அகலப்படுத்த உள்ளனர்.
மேலும் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை 13 இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதியுடன் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வு கூடங்களும் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விரைவில் இத்திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். 1½ ஆண்டுகளில் இப்பணிகளை முடிக்க திட்டமிடபட்டுள்ளது என்றனர்.






