என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் மொட்டை மாடிகளில் பதுங்கிய கொள்ளையர்கள் செல்போன்கள்-பணம் மீட்பு
- வீட்டில் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போன்களுடன் கொள்ளையன் மாடியில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
- திருமங்கலம் பகுதியிலும் கொள்ளையன் ஒருவன் மொட்டை மாடியில் பதுங்கி இருந்து தப்பி ஓடியுள்ளான்.
சென்னை:
சென்னை புரசைவாக்கத்தில் சேஷாத்திரி என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் இன்று அதிகாலை 3 மணிக்கு சத்தம் கேட்டது. இதையடுத்து சேஷாத்திரி மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது கொள்ளையன் ஒருவன் மாடியில் பதுங்கி இருந்தான். அவனிடம் 3 செல்போன்கள், ரூ. 14 ஆயிரம் பணம் இருந்தது. அவனை பிடித்து வேப்பேரி போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போன்களுடன் கொள்ளையன் மாடியில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே திருமங்கலம் பகுதியிலும் கொள்ளையன் ஒருவன் மொட்டை மாடியில் பதுங்கி இருந்து தப்பி ஓடியுள்ளான். திருமங்கலம் 13-வது பிரதான சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கொள்ளையன் ஒருவன் பதுங்கி இருப்பதாக ரோந்து போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் செல்வதற்குள் கொள்ளையன் தப்பிச் சென்று விட்டான். தப்பி ஓடிய கொள்ளையன் திருமங்கலம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஏதேனும் ஈடுபட்டுள்ளானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அவனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.