என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் மேஸ்திரி பலி
- திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த சூரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36), கட்டி மேஸ்திரி. இவரது மனைவி உமா (26). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். மனைவியை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சங்கர் பைக்கில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்தார்.
கட்டளை அருகே வரும் போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரிய வில்லை. பின்னர் சங்கர் மனைவி நள்ளிரவு உறவினருடன் பைக்கில் செய்யாறு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி வந்துள்ளார். அப்போது கட்டளை அருகே சாலையில் தனது கணவர் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து உமா நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






