என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு: கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்- அரசியல் கட்சியினர் முற்றுகை
- சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- தமிழக விவசாயிகள், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை:
கோவை மாநகர பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
இந்த நிலையில் அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணையை கட்டி வருகிறது.
மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு தமிழக விவசாயிகள், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் கேரள அரசு பஸ்சை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பாலக்காடு புறப்பட்டு சென்ற கேரளா அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது கேரளா அரசு தடுப்பணைகளை கட்டுவதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், தமிழ் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
கேரளா அரசு அட்டப்பாடி அருகே உள்ள கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இந்த தடுப்பணை கட்டினால் சிறுவாணி, பில்லூர் ஆகிய அணைகளுக்கு வரும் நீர் கோடைகாலத்தில் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்.
இதனால் கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கனவே கேரளா அரசு சிறுவாணி அணையில் 50 அடி உயர கொள்ளளவை எட்டவிடாமல் தென்மேற்கு பருவ மழை காலகட்டங்களில் 45 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்பவிடாமல் செய்து வருகின்றனர்.
எனவே அனைத்து கட்சிகள் சார்பில் கேரள பஸ்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தி உள்ளோம். தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், கேரள அரசு மேலும் சில தடுப்பணைகளை கட்ட முயற்சி செய்து வருகிறது.
எனவே கேரள அரசு கோவை மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கைவிடவில்லை என்றால் தமிழக - கேரள எல்லையில் மிகப்பெரிய போராட்டத்தை அடுத்தக்கட்டமாக நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






