என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்- வெளி மாநில வியாபாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர்
    X

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்- வெளி மாநில வியாபாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர்

    • குழந்தைகளுக்கான ஜவுளிகள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை ஜவுளிகள் உள்ளன.
    • பொதுவாக வெளி மாநில வியாபாரிகள் ரூ.5 லட்சம் வரை ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை (கனி) மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 236 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப்புகழ் பெற்றது.

    வாரச்சந்தைக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளிகளின் விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குழந்தைகளுக்கான ஜவுளிகள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை ஜவுளிகள் உள்ளன. வாரச்சந்தை நடைபெறும் அன்று ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். விசேஷ நாட்களில் மட்டும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். உள்ளூர் வியாபாரிகளும், வெளி மாவட்ட வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு ஜவுளி சந்தை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் கடந்த 2 வாரமாக வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    பொதுவாக வெளி மாநில வியாபாரிகள் ரூ.5 லட்சம் வரை ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதேபோல் வெளி மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவே வருகின்றனர். இதனால் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது,

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வெளிமாநில வியாபாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். அவர்கள் முகவரிக்கு துணிகளை அனுப்பி வருகிறோம். ஆனாலும் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை என்றனர்.

    Next Story
    ×