search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை வீட்டில் 14 பழங்கால சிலைகள் மீண்டும் மீட்பு- விலை மதிப்பற்றது என அதிகாரிகள் தகவல்
    X

    சென்னை வீட்டில் 14 பழங்கால சிலைகள் மீண்டும் மீட்பு- விலை மதிப்பற்றது என அதிகாரிகள் தகவல்

    • தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.
    • தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், 7-வது மெயின்ரோடு, 1-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சோபா துரைராஜன். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இவரும் கணவருடன் அமெரிக்காவிலேயே வாழ்கிறார். இவரது சென்னை வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே டிசம்பர் 9-ந்தேதி அன்று அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்து 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக கடந்த ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    3-வது முறையாகவும் அந்த வீட்டில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டார்கள். இதற்காக கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஷ்பாபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ராமர், வள்ளி, தெய்வானை இணைந்த முருகன், நந்தி உள்ளிட்ட 14 பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டது.

    பிரபல சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரிடம் இருந்து, கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து மேற்கண்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும், போலீஸ் விசாரணையில், சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட வீடு தரைதளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் என்ற 3 பகுதிகளை கொண்டது. அந்த வீட்டில் சோபா துரைராஜனின் வயது முதிர்ந்த 4 உறவுப்பெண்கள் மட்டும் தற்போது வசிப்பதாகவும், திரும்பிய திசை எல்லாம், அந்த வீட்டில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்களாக காட்சி அளிப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.

    இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோபா துரைராஜன் வீட்டில் இதுவரை கைப்பற்றிய சிலைகள் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத கலைப்பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×