என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் ஊட்டி மார்க்கெட்டில் 15 கடைகளை உடைத்து பணம் கொள்ளை
    X

    நீலகிரியில் ஊட்டி மார்க்கெட்டில் 15 கடைகளை உடைத்து பணம் கொள்ளை

    • மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 15 கடைகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • 15 கடைகளில் ஒரு கடையில் மட்டும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்ததுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஊட்டி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு காய்கறி, மீன் கடை, பழக்கடை, பூக்கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் காய்கறிகள், பழங்கள் என அனைத்து பொருட்கள் வாங்குவதற்கு இங்கு தான் வருவார்கள்.

    இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இந்த மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் இந்த மார்க்கெட் எப்போதுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். எந்நேரமும் மக்கள் கூட்டமாகவே காணப்படும்.

    இன்று காலை வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதற்காக மார்க்கெட்டிற்கு வந்தனர். அப்போது மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 15 கடைகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியான அந்த கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கல்லாவில் வைத்திருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்ற பிறகு நள்ளிரவு நேரத்தில் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 15 கடைகளில் கொள்ளை நடந்தது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாபாரிகள் அனைவரும் திரண்டனர்.

    சம்பவம் குறித்து ஊட்டி நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கடைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் விசாரித்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்மநபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அந்த நபர் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் 15 கடைகளில் ஒரு கடையில் மட்டும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்ததுள்ளது. மற்ற கடைகளில் எவ்வளவு பணம் கொள்ளை போய் உள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி மார்க்கெட்டில் 15 கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்தது ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×