search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகேபோலி மருத்துவர் சிக்கினார்
    X

    தருமபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி ஆய்வு செய்து போலி மருத்துவர் தேவியை கையும் களவுமாக பிடித்த போது எடுத்தபடம்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகேபோலி மருத்துவர் சிக்கினார்

    • போலி மருத்துவர் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைத்து சிகிச்சை பொது மக்களுக்கு அளித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் வருவதை அறிந்து போலி மருத்துவர் அங்கிருந்து தப்பித்து வெளியேறினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டத்தில் மலை கிராமம் பகுதிகள் அதிக அளவில் உள்ளதால் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் ஆயுர்வேதிக், சித்தா யுனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் என சில மருத்துவங்களை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தருமபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்திக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    அதன் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் பகுதியில் போலி மருத்துவர் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைத்து சிகிச்சை பொது மக்களுக்கு அளித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அங்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி மருத்துவம் பார்க்கப்படுவதாக கூறப்பட்ட வெங்கட்சமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த வீட்டில் ஒரு பெண்மணி மருத்துவம் பார்ப்பதற்கான மாத்திரைகள், மருந்துகள், பாட்டில்கள், குளுக்கோஸ், ஸ்டேட்டஸ் கோப், மருத்துவ உபகரணங்கள், அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை கைது செய்ய பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்து போலி மருத்துவர் அங்கிருந்து தப்பித்து வெளியேறினார்.

    உடனே சுற்றி வளைத்து அந்த போலி மருத்துவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் தேவி (வயது48) எனவும், இதே பகுதியை சார்ந்தவர் எனவும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தேவியை கைது செய்தனர்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி கூறுகையில் நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54 இன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். பாமர மக்களின் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி மருத்துவர்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றனர்.

    அவர்களை கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வருட சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மாவட்டம் தோறும் கண்காணிப்புக்குழு இணை இயக்குனர்கள் போலீசார் மூலம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவோம்.போலி மருத்துவர்கள் குறித்து புகார் எண் 104 மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

    Next Story
    ×