என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவையில் கார்த்திகை தீபத்திற்காக 15 வகை அகல்விளக்குகள் தயாரிப்பு
- சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிதம்பரம், கடலூர், காரைக்கால் வியாபாரிகள் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அகல்விளக்குகளுக்கு ஆர்டர் தருகின்றனர்.
- புதுவையில் மண் எடுக்க கட்டுப்பாடு உள்ளது. அதை தளர்த்தி தந்தால் உதவியாக இருக்கும்.
புதுச்சேரி:
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
இதனையடுத்து புதுவை உட்பட தமிழகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வீட்டு வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம்.
வீடுகளில் ஏற்றப்படும் கார்த்திகை திருவிழாவுக்கான அகல்விளக்கும் தயாரிக்கும் பணி புதுவையில் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
கார்த்திகைக்காக அகல் விளக்குகள் இந்த முறை பல மாடல்களில் தயாராகின்றன. குறிப்பாக ஒத்தவிளக்கு, ஸ்டார் விளக்கு, லட்சுமி விளக்கு, யானை விளக்கு, மூன்றுமுகம் லட்சுமி விநாயகர் விளக்கு, 5 முகம் லட்சுமி விநாயகர் விளக்கு, குத்துவிளக்கு, சுத்துவிளக்கு என மும்முரமாக விளக்குகளை தயாரிக்கின்றனர்.
கடந்த காலத்தில் ஒத்த விளக்கு டெரகோட்டா, கோல்டு கலரில் மட்டும் கிடைக்கும். இந்த முறை விளக்குகளை 9 வண்ணங்களில் வாங்கலாம். குறிப்பாக பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் என வண்ணங்களில் விளக்குகள் தயாராகி வருகின்றன. இதற்கு முக்கியக்காரணம் வெளிமாநிலங்களில் ஏற்பட்டுள்ள அதிக வரவேற்பால் ஆர்டர்கள் புதுவையில் குவிகிறது.
முன்பு சக்கரத்தை வைத்து சுற்றி விளக்குகளை தயாரிப்பதை மாற்றி மோட்டார் மூலம் சுற்றி விரைவாக விளக்குகளை உருவாக்குகிறார்கள்.
களிமண்ணை எடுத்து விளக்கு உருவாக்கி, அதற்கு டிசைன் செய்து 4 மணி நேரம் காயவைத்த பின்பு செங்கல் சூளையில் 2 நாட்கள் வைக்கிறார்கள். அதிலிருந்து சுட்டு எடுக்கப்பட்ட விளக்குகள் வலிமையாக இருக்க பெவிகால் கலந்த கலவையில் முக்கி எடுத்து 2 மணி நேரம் காய வைக்கிறார்கள்.
அதன்பிறகு 9 வகை வர்ணம் பூசும் பணி தொடங்குகிறது. ஒவ்வொரு விளக்கையும் தனி பாக்கெட்டில் வைத்து 100 அகல்விளக்கு கொண்ட பாக்ஸ் உருவாக்கி வெளியூருக்கு அனுப்புகிறார்கள்.
அகல்விளக்கு உற்பத்தி செய்யும் கலைஞர்கள் கூறியதாவது:-
கொரோனா காலங்களில் குறைந்த அளவே விளக்கு விற்பனையானது. தற்போது விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கார்த்திகை தீபத்தை கொண்டாட 9 வர்ணங்களில் விளக்குகளைத் தயாரித்து வியாபாரிகளுக்கு அனுப்புகிறோம்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிதம்பரம், கடலூர், காரைக்கால் வியாபாரிகள் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அகல்விளக்குகளுக்கு ஆர்டர் தருகின்றனர். எங்களால் தற்போது ஆயிரம் விளக்குகள் தான் தரமுடிகிறது. விளக்கு செய்யும் பணியில் 15-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகிறோம்.
30-ந் தேதிக்குள் முடித்து விடுவோம். சங்கராபரணி ஆற்று களிமண் எடுத்துதான் செய்கிறோம். அந்த மண்ணுக்கு நல்ல பொம்மைகளை வடிக்க முடியும். மண் பொம்மை செய்யும் போது வெடிக்காது. வளவளப்பாக இருக்கும். காலை முதல் மாலை வரை விளக்கு தயாரிப்பில் ஈடுபடுறோம்.
தேவை அதிகமாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை ஈடு செய்வோம். குறிப்பாக 5 முகம் கொண்ட லட்சுமி விநாயகர் சிலை விளக்கு செய்வது கடினம். 4 நாட்களாவது ஆகும். சென்னைக்கு இவ்விளக்கு அதிகளவில் செல்கிறது. புதுவையில் மண் எடுக்க கட்டுப்பாடு உள்ளது. அதை தளர்த்தி தந்தால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






