search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது:  இடி, மின்னலுடன் தருமபுரியில் கனமழை கொட்டியது
    X

    தருமபுரி-சேலம் பிரதான சாலை பிடமனேரி பிரிவு பகுதி மற்றும் தருமபுரி நான்கு ரோடு, ஆவின் சந்திப்பு பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது: இடி, மின்னலுடன் தருமபுரியில் கனமழை கொட்டியது

    • தருமபுரி 4 ரோடு, ஆவின் சந்திப்பு பகுதியில் மழைநீர் சாக்கடை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
    • விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நிலங்களில் விதைக்கப்பட்ட நெல், உளுந்து போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, பாலக்கோடு, காரிமங்கலம், ஒகேனக்கல் நல்லம்பள்ளி, சோம்பட்டி, இண்டூர், நாகதாசம்பட்டி, தருமபுரி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து தருமபுரி-சேலம் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தருமபுரி நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 4 ரோடு, ஆவின் சந்திப்பு பகுதியில் மழைநீர் சாக்கடை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தருமபுரி எஸ்.வி. ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு சாலையில் மழைநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாததாலும், பள்ளமான பகுதி என்பதாலும் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

    பல பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப் படாததால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் சாலையில் சென்றது.

    தருமபுரி நகர பகுதியை ஒட்டி உள்ள அன்னசாகரம் ஏரிக்கு செல்லும் மழை நீர் வாய்க்கால் பகுதியில் சிலர் நீர் வழிப் பாதையை அடைத்து உள்ளனர். இதனால் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்தது.

    விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் நிலங்களில் விதைக்கப்பட்ட நெல், உளுந்து போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    குறைந்த அளவு மழைக்கே நகராட்சி பகுதிகள் தாக்கு பிடிக்காதது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி-4 செ.மீ, பாலக்கோடு-9.32 செ.மீ, மாரண்டஅள்ளி- 0.70 செ.மீ, பென்னாகரம், 2.40 செ.மீ, ஒகேனக்கல்-5.80 செ.மீ, அரூர்-0.20 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×