என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
- பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கூட போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- கிராமங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று கூறினர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார்.
கூட்டம் தொடங்கியவுடன் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் பேசுகையில், தான் புதிதாக பொறுப் பேற்றுள்ளதாகவும், தனக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் செல்வராஜ், குமார் ஆகியோர் பேசுகையில், கடந்த 8 மாதங்களாக 3 முறை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கூட போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மாவட்ட கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க எங்களால் முடியவில்லை. கிராமங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி மாவட்ட கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் கூறுகையில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கும் நிதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது என்று கூறினர்.
இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஊராட்சிக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக ஒரு சில மாவட்ட கவுன்சிலர்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணி உத்தரவு பெற்று திட்ட பணிகளை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உள்ளார். விசாரணையின் அடிப்படையில்தான் தீர்மானத்துக்கு கொண்டு வராமல் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலும் என்று கூறினார்.






