என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளிள் சாகசம் செய்யும் இளைஞர்.
தஞ்சையில், இரவு நேரங்களில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள்
- மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரம்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இப்படி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் சில வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த சாலையில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ரேசில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டி சென்று வீலிங் சாகசம் செய்கின்றனர். குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இந்த சம்பவம் நடந்து வருகிறது.
மோட்டார் சைக்கிள் முன் சக்கரத்தை அலேக்காக தூக்கியும், பின் சக்கரத்தை தூக்கியும் தீப்பொறி பறக்க வீலிங் சாகசம் செய்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இது போன்ற சாகச சம்பவம் நடைபெறாமல் தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு பணியையும் பலப்படுத்த வேண்டும் என்றனர்.






