என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலத்த மழை எச்சரிக்கை- திருவள்ளூருக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
- மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
- கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி புயல், மழையை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவடத்தில் புயல் மழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் திருவள்ளூர் வந்தனர்.
அவர்கள் இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் காவலர்கள் விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 3 குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் உள்ள முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஜெனரேட்டர், விளக்குகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றனர்.






