என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னிமலை அருகே வறண்டாவில் படுத்து தூங்கிய கட்டிட மேஸ்திரி கட்டுவிரியன் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேளப்பாளையம் சர்க்கார் கிணறு வீதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது65). இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்தார்.

    நேற்று இரவு ராஜமாணிக்கம் வீட்டின் வெளியே வறண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது 2 அடி நீளம் கொண்ட ஒரு கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வறண்டாவில் ஏறியது.

    அங்கு தூங்கு கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் இடுப்பு பகுதியில் அந்த பாம்பு கடித்தது.

    இதில் வலியால் கதறி துடித்த அவரை உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி பாப்பாதி(60) சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.
    மக்கள் நலக்கூட்டணி சுடுகாட்டில் புதைக்கப்பட்டு விட்டதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியளித்துள்ளார்.
    கோபி:

    கோபியில் காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோபி சட்டமன்ற தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றார் என்றாலும் உண்மையான வெற்றி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சரவணனுக்குதான்.

    தனக்கு கடைசி வாய்ப்பு என்பதால் செங்கோட்டையன் 86 ஆயிரம் பேருக்கு 1000 வீதம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசியில் ஜெயலலிதாவிடம் பேசிய போது அரசு அதிகாரிகள் அ.தி.மு.க.வின் வெற்றியை அறிவித்து விட்டனர்.

    தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 பேரிலிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்தப்படியாக மக்கள் ஏற்றுக்கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

    பிரதமர் பதவிக்கு வரும் முன்னே மீனவர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று மோடி சொன்னார். ஆனால் இன்று வரை தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, அக்கறையும் காட்டவில்லை.

    சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    தமிழகத்தில் இனி மக்கள் நலக்கூட்டணி என்று சொல்லிவிட்டு நடமாட முடியாது. மக்கள் நலக்கூட்டணி சுடுகாட்டில் புதைக்கப்பட்டு விட்டது.

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றில் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்துள்ளது. இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் கடன்களையும் அரசு உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
    கோபி அருகே இன்று மில்லுக்கு சென்ற வேன் பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் 15 பெண்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள வெளள்ளாங்கோவிலில் உள்ள மில்லுக்கு கோபி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட தொழிலாளர்கள் வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்தனர்.

    அதே போல் இன்றும் வேனில் தொழிலாளர்கள் கோபியிலிருந்து வெள்ளாங் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    கோபி ஆண்டவர் மலை என்ற இடத்தில் சென்ற போது அந்த வேன் எதிர்பாராத வகையில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த பெண்கள் உள்பட தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    இதில் சத்யா (வயது 20), அபிராமி (25), மோனிகா (18) உள்பட 15 பெண்களும், தங்கப்பசாமி (28), சிவகுமார் (28), பூபதி (20), சந்துரு (18) ஆகியோரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம் அருகே திருமணம் தடை நீக்க சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசாபுரம் உள்ளது. இந்த ஊரில் புகழ்மிக்க பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை திருமண தடை நீக்க மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பு யாகம் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய யாகம் மாலை வரை தெடர்ந்து நடந்தது.

    இந்த யாகத்தில் ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் கோவை, திருப்பூர், சேலம், கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    மணமாகாத கன்னி பெண்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளி போன இளைஞர்கள் பலர் தங்களது பெற்றோருடன் இந்த யாகத்தில் கலந்து கொண்டு முருகனை மனமுருகி வழிபட்டனர்.

    இதேபோல் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    சித்தோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    ஈரோடு:

    ஆப்பக்கூடல், அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரபு. இவருக்கு ஸ்ரீமதி என்ற மகளும், பிரதீபன் என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று பிரதீபன் தனது அக்கா ஸ்ரீமதியுடன் சித்தோடு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பிரதீபன் மோட்டார் சைக்கிள் ஓட்ட ஸ்ரீமதி பின்னால் உட்கார்ந்து கொண்டு வந்தார்.

    கோவை–சேலம் நெடுஞ்சாலையில் சித்தோடு பிரிவு ஆரியாஸ் ஓட்டல் அருகே வந்த போது பிரதீபன் அவர்களுக்கு பின்னால் வந்த லோடு வேன் பிரதீபனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பிரதீபனும், ஸ்ரீமதியும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். பிரதீபனுக்கு தலையில் பலத்த அடிப்பட்டு ஆபதான நிலையில் இருந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து இருவரையும் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரதீபனின் நிலை கவலைகிடமாக இருந்ததால் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் பிரதீபன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ஸ்ரீமதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் குடிப்பதை மனைவி தட்டி கேட்டதால் போஸ்ட் மாஸ்டர் தற்கொலை செய்துக் கொண்டார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 40). இவர் சத்தி அடுத்துள்ள கொமரபாளையம் கிளை அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் ஈஸ்வரி (வயது42). நந்தினி என்ற மகள் உள்ளார்.

    பழனிசாமிக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் குடித்துவிட்டு வந்ததை மனைவி ஈஸ்வரி கண்டித்தார். மகள் பெரியவள் ஆகி விட்டாள்... பொறுப்பு இல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே... என்று சம்பவத்தன்று ஈஸ்வரி தட்டி கேட்டாராம். இந்த நிலையில் இரவு பெரியசாமி தனது அறைக்கு சென்று தாழ்பாள் போட்டு கொண்டார்.

    பிறகு மனம் உடைந்த அவர் அறையில் உள்ள மின் விசிறியில் மனைவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கதவு திறக்கப்படாமல் இருந்ததையொட்டியும் கதவு தட்டி பார்த்தும் திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார். அங்கு பெரியசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
    பெங்களூர் விமானநிலையத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவை சோதனையில் என்ற பெயரில் அவமதித்ததற்காக, அகில பாரத இந்து மகா சபா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
    ஈரோடு:

    அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில தலைவர் ஏ.சுபாஷ் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் படகு மற்றும் வலைகளை சேதப்படுத்தி வரும் இலங்கை ராணுவத்தின் தமிழர் விரோத போக்கை அகில பாரத இந்து மகா சபா கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்தவும், தமிழக மீனவர்களின் நலன் காக்கவும், பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கச்சத்தீவில் இலங்கை அரசு கிறிஸ்தவ தேவலாயம் கட்டுவதை அகில பாரத இந்து மகா சபா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    பெங்களூர் விமானநிலையத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நேர்ந்த அவமானத்தை ஏற்படுத்திய அதிகாரிகளின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். சோதனை என்ற பெயரில் இப்படி அவமரியாதை செய்யலாமா?

    மேலும் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுகுழு கூட்டம் வரும் 15–ந் தேதி கோபி உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள பங்களா தொட்டியை சேர்ந்தவர் வீரன் (வயது65). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். இவர் வழக்கம் போல டீபிபி பள்ளம் என்ற வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றார்.

    அப்போது ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த யானை வீரனை கண்டதும் விரட்டியது. இதைக்கண்டு திடுக்கிட்ட வீரன் அதனிடமிருந்து தப்பிக்க ஓடினார்.

    ஆனால் வயதான அவரால் ஓட முடியவில்லை. இதற்கிடையே கீழே கிடந்த பாறை தடுக்கி அவர் கீழே விழுந்தார்.

    அருகே வந்த அந்த யானை முதியவர் வீரனை காலால் மிதித்தது. பிறகு துதிக்கையால் தூக்கி வீசியடித்தது. இதில் வீரன் குற்றுயிரும், குலையிருமாக கிடந்தார். அவரை தூக்கி வீசிய யானை அங்கிருந்து வனப்பகுதி உள்ளே சென்றுவிட்டது.

    அப்போது அந்த வழியாக வந்தவர்கள் வீரனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டியில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சித்ரா (வயது28). ஆறுமுகம் இறந்துவிட்டார். சித்ரா கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    வேலை செய்யும் இடத்தில் சேட்மைதீன் (32). கட்டிட தொழிலாளியான இவரும், சித்ராவும் தினமும் ஒன்றாக வேலைக்கு செல்வார்கள். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    சித்ராவும், சேட்மைதீனும் அடிக்கடி வெளியே சென்று தனது காதலை வளர்த்து வந்தனர். சித்ராவுக்கு, சேட்மைதீனின் உறவினர் ஒரு வருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு சித்ராவை விட்டு சேட்மைதீன் பிரிந்து சென்றார்.

    இந்நிலையில் சித்ரா நேற்று இரவு சாஸ்திரி நகர் ரெயில்வே கேட் அருகே சென்ற போது, அங்கு சேட்மைதீன் நின்று கொண்டிருந்தார். அப்போது சேட்மைதீன், சித்ராவை நீ என்னை விட்டு எப்படி இன்னொரு வருடன் பழகலாம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்மைதீன் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை கொண்டு சித்ராவின் கை, காலில் குத்திவிட்டு ஓடிவிட்டார். சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்மைதீனை கைது செய்தனர்.
    ஈரோடு சாஸ்திரி நகரில் மின்கம்பத்தை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டு உட்பட்ட பகுதியான சாஸ்திரி நகர் அம்பேத்கர் வீதி நடுவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

    மேலும் அதே பகுதி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டின் அருகே அதாவது காம்பவுண்ட்சுவருக்குள் மின்கம்பம் உள்ளது. இரவு நேரங்களில் இந்த மின்கம்பத்தில் இருந்து நெருப்பி பொறி வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு அந்த மின்கம்பம் இடிந்து சத்தியமூர்த்தி கம்பவுண்ட் சுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே மின்கம்பம் வீட்டின் மேல் விழுந்திருந்தால் பெரிய விபரீதம் ஏற்பட்டு இருக்கும். எனவே இதை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கூறியதாவது:–

    இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் மத்தியில் மின்கம்பம் நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துள்ளாகின்றனர். மின்கம்பத்தில் அடிகடி நெருப்பு பொறி ஏற்படுகிறது. இதனால் வெளியே வர அச்சப்படுகிறார்கள்.

    இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு அருகே ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு,ஆர்.என்.புதூர் பெருமாள் மலை, மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது34). இவர் சம்பவத்தன்று பெருமாள் மலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெருமாள் மலை கோவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் இருந்து வந்த கார் இளங்கோவன் மீதும் அதே ரோட்டில் நடந்து சென்ற பெருமாள் மலை பகுதியை சேர்ந்த சாந்தி மற்றும் பவானி, காவேரி வீதியை சேர்ந்த செல்வம் ஆகியோர் மீதும் மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு,கருங்கல் பாளையம், பச்சையப்பா சந்தை சேர்ந்தவர் மோகன். (வயது 49). இவர் சம்பவதன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திடீரென மாயமானார்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம், பச்சையப்பா சந்தை சேர்ந்தவர் மோகன். (வயது 49). இவர் சம்பவதன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திடீரென மாயமானார்.

    மோகன் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் மோகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ற விவரமும் தெரியவில்லை. காணமல் போன அன்று மோகன் புளு கலர் பேன்ட். வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகனை தேடி வருகிறார்கள்

    ×