search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: வேட்பாளர் பெயருடன் சின்னம் அச்சடிப்பு- பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைப்பு
    X

    தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: வேட்பாளர் பெயருடன் சின்னம் அச்சடிப்பு- பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைப்பு

    • 5-வது மின்னணு எந்திரத்தில் 78-வது இடத்தில் நோட்டா இடம் பெறும்.
    • பணிகள் அனைத்தும் முடிவடைந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு வருகிற 27-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதற்காக 238 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதற்காக ஒரு வாக்குசாவடி மையத்தில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்கும் வசதி உள்ள வி.வி. பேட் எந்திரமும் அமைக்கப்படும். இதில் 5-வது மின்னணு எந்திரத்தில் 78-வது இடத்தில் நோட்டா இடம் பெறும்.

    தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

    இதில் ஒரு சில சின்னத்தை பெற கடுமையான போட்டி நிலவியதால் தேர்தல் அதிகாரிகள் குலுக்கல் முறையில் அந்த சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கினர். இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டனர்.

    இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டுவதற்காக வேட்பாளர்களின் பெயர் சின்னம் மற்றும் வாக்கு சாவடிகளுக்கு முன்பு ஒட்டப்படும் வேட்பாளர்களின் போட்டோ, முகவரி மற்றும் சின்னத்துடன் ஒட்டும் போஸ்டர்கள் அச்சடிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் அரசு அச்சகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரத்தில் அனைத்து கட்சி முகவர்களின் முன்னிலையில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தப்படும். இந்த பணிகள் இந்த வார கடைசியில் நடைபெறும் என்று தெரிகிறது.

    பின்னர் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டுப் பதிவுக்கு முந்தைய நாளான 26-ந் தேதி மாலை முதல் வாக்கு சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

    Next Story
    ×