search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

    • மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும்.
    • தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வின்போது முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் 'ஆப்சென்ட்' ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரீட்சை எழுத வராதவர்களில் 44 ஆயிரம் பேர் இடைநிற்றல் மாணவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 6 ஆயிரம் பேர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என தெரிய வந்துள்ளது.

    அதுமட்டுமின்றி பிளஸ்-2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா கால கட்டத்தில் 10-ம் வகுப்பில் ஆல் பாஸ் பெற்றவர்கள் இவர்கள் நேரடியாக பிளஸ்-1 வகுப்பில் கடந்த ஆண்டு சேர்ந்து முதன் முதலாக பொதுத்தேர்வை எதிர்கொண்டவர்கள்.

    அவ்வாறு நடைபெற்ற தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். விதிமுறைப்படி பிளஸ்-2 வகுப்பில் சேர அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளஸ்-1 அரியர் தேர்வையும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுடன் எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்ற பயம் ஏற்பட்டதால் மாணவர்கள் பலர் தேர்வு எழுத வரவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.

    அது மட்டுமல்ல கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வராமல் வேலைக்கு சென்றுவிட்டது உள்பட பல்வேறு காரணங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 674 மாணவர்கள் பொது தேர்வை எழுத வராத நிலையில் இந்த ஆண்டு 50 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    இதைத் தொடர்ந்து அவர் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவிடம் உடனடியாக பேசினார். மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதின் உண்மை காரணத்தை விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார். பரீட்சை எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    சட்டசபை தொடங்க உள்ள நிலையில் இதுபற்றி எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பதால் விரிவாக விசாரித்து உண்மையான காரணத்தை அறிக்கையாக தயார் செய்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×