search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து- கோவை தொழிலதிபர் பலி
    X

    அவினாசி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து- கோவை தொழிலதிபர் பலி

    • காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவினாசி:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 30). கோவையில் உள்ள பிரபல கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

    இவருடன் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஹில், சேலத்தை சேர்ந்த ஜெய்சூர்யா (18), கோவையை சேர்ந்த மிதுன் (16) ஆகியோரும் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அய்யப்ப பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன்ராஜ் உள்பட 4பேரும் பவானிக்கு சென்றனர். அங்கு பஜனையை முடித்து விட்டு இன்று அதிகாலை கோவைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுஹில் ஓட்டினார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை பகுதியில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×