என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையின் மட்டத்திலிருந்து சுமார் இரண்டடி வரை உயரமாக அமைத்துள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை சிரமத்துடன் கடக்கும் மக்கள்.
பாகலஹள்ளி ஊராட்சி, பாகல்பட்டி பகுதியில் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க ஏற்பாடு
- மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சி பாகல்பட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முத்தம்பட்டி வழியாக பொம்மடி செல்லும் சாலையில் புதிதாக அகலப்படுத்தப்பட்ட சாலை, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெட்ரோலிய நிறுவனம் வரை அமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு இல்லாமல் மழை நீர் வடிகால் கால்வாய்களை தார்ச்சாலையின் மட்டத்திலிருந்து சுமார் இரண்டடி வரை உயரமாக அமைத்துள்ளனர். பல இடங்களில் மிகவும் குறுகியதாகவும் மற்ற கால்வாய்களோடு இணைக்கும் இணைப்புகள் இல்லாமலும் அமைத்துள்ளனர். இதனால் இச்சாலை மற்றும் மழைநீர் கால்வாய் பயன்பாட்டிற்கு வரும் பொழுது மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் முதியோர்கள் மற்றும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். அதனை அடுத்து நேரில் வந்து ஆய்வு செய்த அவர் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக பேசி விரைவில் சமூகத் தீர்வு ஏற்படுத்தப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யா குமார், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.