என் மலர்
அரியலூர்
தா.பழுர் :
கடலூர் மாவட்டம், கண்டமங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்த கனகசபை மனைவி செல்வமணி ( வயது 60). இவர் தனது மகள் கவிதாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோடங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் முருகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு கவிதாவை அடிக்கடி திட்டி துன்புறுத்தி வந்தாராம். இதனால் கவிதா கணவனிடம் கோபித்துக் கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் செல்வ மணி தனது மகள் கவிதாவை சமாதானம் செய்து கோடங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது முருகனுக்கும், செல்வமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் முருகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வ மணியின் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (50)கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை– கும்பகோணம் ரோட்டில் நெல்லித்தோப்பு கடைவீதியில் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் விஸ்வ நாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி, பஸ்சை ஓட்டிவந்த மன்னார்குடி மேலநத்தம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலங்குப்பத்தை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது 50). மயிலாடுதுறை அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் ரவி (55). விருத்தாச்சலம் அருகே உள்ள பிஞ்சானூரை சேர்ந்தவர் துரை. கிடை மாடுகள் மூலம் தொழில் செய்து வரும் இவர்கள், ஒவ்வொரு ஊராக மாடுகளை அழைத்து சென்று, அதன் மூலம் கிடைக்கும் சாணத்தை வயல்களுக்கு உரமாக கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 250 மாடுகளை விழுப்புரம் மாவட்டம் மங்களம்பேட்டையில் இருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு சாலை வழியாக அழைத்து சென்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் கூவத்தூர் அருகே செல்லும் போது அந்த வழியாக சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மீன்களுக்கான தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. லாரி டிரைவர் மாடுகள் மீது மோதாமல் இருக்க லாரியை ஓரமாக ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பஸ் வேகமாக வந்தது. திடீரென அந்த பஸ் மாடுகள் கூட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் லாரி–பஸ்சின் இடையில் சிக்கி 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
3 மாடுகள் பலத்த காயமடைந்தன. இந்த விபத்தில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மற்றும் லாரி டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பியோடிய பஸ்–லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் மோதி 14 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






