search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம்- நிர்வாக அதிகாரிக்கு பாராட்டு விழா
    X

    சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம்- நிர்வாக அதிகாரிக்கு பாராட்டு விழா

    • சிறுவாபுரி கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிறுவாபுரி முருகன் கோவிலில் திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 21-ந் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    பொன்னேரி:

    சிறுவாபுரி கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், எஸ்எஸ் கியூ லைன் அமைத்தல், திருக்குளம் பாதுகாப்பு வேலி அமைத்தல் முதலான திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 21-ந் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் வசதிக்காக 4 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள், 32 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 25 இடங்களில் குடிநீர் வசதி, 7 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம், 2 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு இடங்களில் அகன்ற டி.வி. திரைகள், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு பேரிகாட், 100 நபர்களுக்கு விபத்து காப்பீடு, 4 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம் பந்தல், ஒரு இடத்தில் தீயணைப்பு பந்தல் ஆகிய வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டன.

    விழாவில் மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

    விழாவினை சிறப்பாக நடத்திய கோவில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில் குமார், ஒன்றிய கவுன்சிலர் து.சந்திர சேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணி தேவராஜ், துணைத்தலைவர் சேகர் ஆகியோருக்கு சிறுவாபுரி கிராம மக்கள் சால்வை, மாலைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×