search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
    X

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை

    • குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது கணவர் நஞ்சுண்ட ரெட்டி. ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சுண்ட ரெட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் லட்சுமம்மா தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் தனியாக வசிக்கும் லட்சுமம்மா வீட்டுக்கு சென்று தான் அக்கொண்டபள்ளி பகுதியில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதாகவும் நிலம் பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து தனக்கு கொடுக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    மர்ம நபர் பேச்சை நம்பிய மூதாட்டி லட்சுமம்மா மர்மநபர் கொடுத்த பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அந்த பத்திரத்தை மீண்டும் அந்த மர்ம நபரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மர்ம நபர் குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.

    குளிர்பானத்தை சாப்பிட்ட லட்சுமம்மாவுக்கு மயக்கம் அடைந்த நிலையில் லட்சுமம்மா கையில் இருந்த 4 தங்க வளையல் மற்றும் 4 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை இந்த மர்ம நபர் கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சுய நினைவிற்கு வந்த லட்சுமம்மா கழுத்தில் தங்க சங்கிலி, கையில் தங்க வளையல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து லட்சுமம்மா கெலமங்கலம் போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    அக்கொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறு வதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×