என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை படத்தில் காணலாம்.
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் கழிவு நீர் கொட்டிய 4 லாரிகள் சிறைபிடிப்பு
- கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது.
- கூவம் ஆற்றில் கழிவு நீரை கொட்டக்கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கூவம் ஆற்றில் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதன் காரணமாக கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது. கூவம் ஆற்றில் கழிவு நீரை கொட்டக்கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இது நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை கூவம் ஆற்றில் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டிய 4 லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜுலு, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் கழிவு நீர் கொட்டிய 4 லாரிகளையும் பறிமுதல் செய்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.






