என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடங்காநத்தம் பகுதியில் புதர் மண்டிய நிலையில் உள்ள சின்னப்பொய்கை வாய்க்கால்.
    X
    கிடங்காநத்தம் பகுதியில் புதர் மண்டிய நிலையில் உள்ள சின்னப்பொய்கை வாய்க்கால்.

    தூர்வாரப்படாமல் கிடக்கும் சின்னப்பொய்கை வாய்க்கால்

    அகரமாங்குடி அருகே தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடக்கும் சின்னப்பொய்கை வடிகால் வாய்க்களால் பலநூறு ஏக்கரில் விவசாயம் பாதிக்கும்-விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே அகரமாங்குடி பகுதியில் உள்ள சின்ன பொய்கை வடிகால் வாய்க்கால் பல வருஷமாக தூர்வாரப்படாததால் நாணல் புதர்கள் அதிகளவில் மண்டியுள்ளதால் மழை காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த ஆண்டு பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், சம்பா நடவு செய்திருந்த நாற்றுகள் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால் சின்னபொய்கை வாய்க்காலை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். வரும் ஆண்டு சின்ன பொய்கை வாய்க்கால் தூர்வாரி தரப்படும் என பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுக்கு உறுதி அளித்திருந்தனர்

    அதனால் இந்தாண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே சின்னபொய்கை வாய்க்கால் தூர்வாரப்படும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் இன்னும் சின்னபொய்கை வாய்க்கால் தூர்வாருவதற்கான எந்த நடவடிக்கையையும் பொதுப்பணித்துறையினர் இதுவரை எடுக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் இந்தாண்டு பருவ மழை பொழிவு அதிகளவில் பெய்தால் கடந்த ஆண்டை விட விளை நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது
    அகரமாங்குடி பகுதியில் சுள்ளான் ஆற்றின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய சின்னபொய்கை வாய்க்கால் மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு, ஆகிய கிராம பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுரைக்காயூர், கிடங்காநத்தம், கோடுகிழி, கருப்பூர், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களுக்கு முக்கிய வடிகால் ஆகவும் சின்ன பொய்கை வாய்க்கால் உள்ளது. சின்ன பொய்கை வாய்க்கால் தூர்வாரி 15 வருடத்திற்கு மேல் இருக்கும் அதனால் வாய்க்கால் முழுவதும் ஆள் உயரத்திற்கு நாணல் புல்கள் வளர்ந்துள்ளது. அதனால் மழைகாலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய வயல்களில் புகுந்துவிடுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    சின்னபொய்கை வடிகாலை இந்தாண்டு தூர்வாரி தருவதாக பொதுப்பணிதுறையினர் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை தூர்வார நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தாண்டு பருமழை பொழிவு அதிகம் இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×