என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி உயர்வு ஒப்பந்தம் அமையாவிட்டால் 10-ந் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் - பவர் டேபிள் உரிமையாளர்கள் அறிவிப்பு
திருப்பூர்:
ஆடை தயாரிப்புக்கு தையல் கட்டண உயர்வு குறித்த ஒப்பந்தம் பவர் டேபிள் சங்க உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படுவது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தொழிலாளர்களுக்கான கட்டண ஒப்பந்தம் அமைக்கப்பட்டது.
அதன்படி முதல் ஆண்டு 19 சதவீதம், 2-வது ஆண்டு 5 சதவீதம், 3-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு தலா 4 சதவீதம் என ஒப்பந்தம் அமைக்கப்பட்டு பவர் டேபிள் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கி வருகின்றனர். ஆனால் சைமா சங்கம் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினருடன் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்படி முதல் ஆண்டு 20 சதவீதம், 2-வது, 3-வது, 4-வது ஆண்டு தலா 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதுவரை 8 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஒப்பந்தம் ஆகாமல் உள்ளது.
இந்தநிலையில் பவர் டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். துணை தலைவர் நாகராஜ், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் பொன்சங்கர், பொருளாளர் சுந்தரம் மற்றும் 48 நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தையல் கூலி உயர்வு குறித்து சைமாவுடன், 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் 10-ந் தேதி முதல் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் தானாகவே உற்பத்தி நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.






