search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    ராஜபாளையம் பகுதியில் நாளை மறுநாள் முதல் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் 7 நாள் தொடர் வேலைநிறுத்தம்

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ராஜபாளையம்:

    இந்தியா முழுவதும் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கேண்டி நூல் ரூ.40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை இருந்த நிலை, தற்போது ரூ.1 லட்சத்து 10,000 முதல் ரூ.1 லட்சத்து 15,000 வரை கடுமையான விலை உயர்வு கண்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் எடுத்து உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தொழில் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன்மூலம் நேரடியாக 10 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    நூல் விலையேற்றம் குறித்து மருத்துவ உற்பத்தியாளர் சங்க கூட்டம் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நூல் விலை கடுமையாக உயர்வை கண்டித்து தொழில் செய்ய இயலாத நிலை உள்ளதால் மே 25 முதல் மே 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கான பேண்டேஜ் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், சைஸிங் தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம் செய்து தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்யப்பட்டது. எனவே உடனடியாக மத்திய அரசு தலையிட்டு பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி நெசவு தொழிலை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×