என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு
சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைக்கு தீர்வு காண பொது நல வழக்கு.
கல்வி நிறுவனங்களில் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைக்கு தீர்வு காணும் பொது நல வழக்கை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுள்ளது.
ராஜபாளையம்
போக்சோ சட்டத்திலும், வன்முறை நடக்க வாய்ப்பு இருக்கும் முக்கிய இடங்களான கல்வி கற்கும் இடங்களில் இருக்கும் சிறுமிகளைப் பாதுகாக்க வழிகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கான வழிகாட்டுதலை வகுத்து தர வேண்டி, உச்சநீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் சார்பில், ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராம் சங்கர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 10 மாதமாக விசாரணைக்கு வராததால் அவர் கடந்த 13-ம் தேதி தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.
அப்போது நாடு முழுவதும் தினம் பள்ளி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கபட்டு வருவதாக கூறினார். அதனை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி, இது தொடர்பான வழக்கை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் வழக்காக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் மனுவில் கூறியிருப்பதாவது:-
அப்பாவி பள்ளிச் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அவர்கள் கல்வி பயிலும் இடங்களில் அதிகம். வளரிளம் பருவத்தின் மாறுபாடுகள் பற்றி அதிகப் புரிதல் இல்லாத வயதில் உள்ள பள்ளிச் சிறுமிகளை தங்களின் இலக்குக்கு பலியாக்கிடும் போக்கு கல்வி நிலையங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் சிறுமிகளின் அடிப்படை உரிமையான கல்வி கற்கும் உரிமையும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வமான அறிவுறுத்தல்களையும், வழிமுறைகளையும் அரசு வழங்கவேண்டியும் இந்தியாவில் உள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து இந்த பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதுபோன்ற கொடுமையான குற்றங்களைக் கண்டுபிடிக்க கல்விநிறுவனங்களில் தனிக்குழு அமைக்கவும், தவறு செய்பவர்களின் மேல் குற்றம் சாட்டவும், போக்சோ சட்டத்தின்படி தண்டிக்கவும் வேண்டிய அறிவுறுத்தல்களை தரும்படி உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுத்தால் , நாடு முழுவதும் இருக்கும் பள்ளி சிறுமிகளுக்குப் மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும்.
இந்த பொதுநல வழக்கு சிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்கும். பாலியல் குறித்த குற்றச்சாட்டுகள் வெளியாகும்போது, அதனை மூடி மறைக்க முயற்சிப்பதும், அது முடியாவிட்டால், யாரேனும் ஒருவரை சிக்கவைத்துவிட்டு, பள்ளி நிர்வாகங்கள் தப்பித்துக்கொள்வதும் முடிவுக்கு வரும். குற்றம் புரிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும், குற்றத்தை மறைக்க முயற்சிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.
Next Story






