என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலுக்கு முன்பு திரண்டிருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
திருவிழாவில் சாமி கும்பிடுவதில் இருதரப்பினர் மோதல்
அரியலூர் அருகே சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோவிலை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிட அதே கிராமத்தில் ஒரே வகையறாவைச் சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்தநிலையில், அண்மையில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுமூகமாக சாமி கும்பிட இருதரப்பினரையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.
ஆனாலும் கோவிலில் சாமி கும்பிட இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஆர்.டி.ஓ. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலை பூட்ட உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தாசில்தார் ஸ்ரீதர் கோவிலை பூட்டினார். இந்நிலையில் பொதுமக்கள் கோயிலை திறந்து சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பகுதி பொதுமக்கள் கோயிலை திறந்து விழா நடத்த அனுமதிக்கவேண்டும் எனக்கோரி நேற்று முன்தினம் இரவு மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க மாரியம்மன் கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. மேலும், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று இரவு வரை கோவிலை மீண்டும் திறக்க ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமையில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட கிராம முக்கியஸ்தர்கள் முயற்சி செய்தும் அதிகாரிகள் இந்த ஆண்டு திருவிழா நடத்த கூடாது என கண்டிப்பாக தெரிவித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தத்தனூர் பொட்டக்கொல்லை மாரியம்மன் கோவிலில் வழக்கமாக மண்டகப்படி மொத்தம் 16 நாட்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் புதிதாக தனித்தனி நபர்களுக்கு என மண்டகப்படி கொடுத்தால் அனைவரும் மண்டகப்படி கேட்டு திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் பழைய வழக்கம் முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டுமென்று ஊர் முக்கியஸ்தர் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே சமயத்தில் பல ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வேலைக்கு செல்கிறவர்கள் திருவிழா முடிந்த பிறகு காப்பு அறுத்தால் மட்டுமே வெளியூர்களுக்கு செல்லவும் சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியும் என்பது சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது. எனவே திருவிழாவை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த முடிக்குமாறு பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
இதை மனதில் கொண்டு அரசு அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்யுமாறு தத்தனூர் வட்டமலை பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அரசு உடனே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்தவுடன் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கூடி ஒரு முக்கிய முடிவு எடுக்கும் வண்ணம் இனி வரும் காலங்களில் எந்த ஒரு தடங்கலும் நடக்கா வண்ணம் கூடி முடிவு எடுக்க மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story






