என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவையில் விபத்து: 4 பேர் காயம்
புதுவையில் நடந்த தனித்தனி விபத்தில் பெண் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை திருபுவனைபாளையம் புத்துக்கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது53) இவர் புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு பஸ்சில் வந்த ராஜேஸ்வரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராஜேஸ்வரி மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த ராஜேஸ்வரிக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ராஜேஸ்வரியை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி பின்னர் இது குறித்து புதுவை போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
புதுவை கொசப்பாளையம் செல்லப்பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது27) சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் காமராஜர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ராஜூவ் காந்தி சிக்னல் அருகே வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜசேகர் ஓடிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை நைனார் மண்டபம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது58) இவர் பொதுப்பணித்துறையில் மஸ்தூராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் புதுவை-விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். வில்லியனூர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் திடீரென முத்துப்பாண்டியன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த முத்துப்பாண்டியனுக்கு கை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் முத்துப்பாண்டியனை புதுவை அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதகடிப்பட்டு புதுநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் உத்திரசேனன் (வயது59) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மருந்து வாங்க புதுவை-விழுப்புரம் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சிறுவந்தாட்டை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக உத்திரசேனன் மீது மோதியது.
இதில் உத்திர சேனன் மற்றும் விபத்தை ஏற்படுத்திய ரஞ்சித் ஆகியோர் இருவரும் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைகாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






