என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர்
வில்லியனூரில் தனியார் பள்ளி டிரைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
ரெட்டியார் பாளையம் புது நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 29) இவர் வில்லியனூர் மணவெளியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
சிவபாலன் வேலை செய்யும் பள்ளியின் தாளாளர் லூயீசின் வீடு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் உள்ளது. இதற்கிடையே பள்ளியின் தாளாளர் வீட்டில் கரையான் பேட் பகுதியை சேர்ந்த ரவீந்தரன் என்ற வாலிபர் அவ்வப்போது வீட்டு வேலை செய்து வந்தார்.
அதற்குண்டான பணத்தை பள்ளியின் தாளாளர் ரவீந்தரனுக்கு கொடுத்து வந்தார். நாளடைவில் ரவீந்தி ரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டு வேலையில் இருந்து நீக்கி விட்டனர்.
அது முதல் சிவபாலனே பள்ளியின் தாளாளர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். ஆனால் தன்னை வேலையில் இருந்து நீக்க சிவபாலன் தான் காரணம் என ரவீந்தரன் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
அவ்வப்போது சிவபாலனிடம் இது பற்றி கேட்டு ரவீந்தரன் தகராறு செய்து வந்தார். ஆனால் இதனை சிவபாலன் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
இந்த நிலையில் சிவபாலன் தனது உறவினர் ராகுல் என்பவருடன் பள்ளி தாளாளர் வீட்டு வேலைக்கு தேவையான ஜல்லிகளை ஒரு மினி வேனில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர் ஜல்லிகளை வீட்டு முன்பு சிவபாலன் இறக்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த ரவீந்தரன் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து சிவபாலன் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் நிலை குலைந்து போன சிவபாலனை அவரது உறவினர் பாபு மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைகாக சிவபாலன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்தரனை தேடிவருகிறார்கள்.
Next Story






