என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பேக்கரி கடையை உடைத்து மிரட்டல்
கொம்பாக்கத்தில் பேக்கரியை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் குமரன்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜீவன்(வய53). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 23 ஆண்டுகளாக புதுவையில் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக வில்லியனூர்-கொம்பாக்கம் மெயின் ரோட்டில் ராஜீவன் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரி கடைக்கு கொம்பாக்கம் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் பிரகாஷ் ஆகியோர் அடிக்கடி பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
இந்தநிலையில் சக்திவேலும், பிரகாசும் பொருட்கள் வாங்க ராஜீவனின் பேக்கரி கடைக்கு வந்தனர். அப்போது அவர்கள் வெளியூரில் இருந்து வந்து இங்கு கடை வைத்துக்கொண்டு பொருட்களை அதிக விலைக்கும், தரமற்றதாக விற்கிறாயா? என கேட்டு தகராறு செய்தனர்.
இதனை ராஜீவன் தட்டிக்கேட்ட போது அவரை தகாத வார்த்தை களால் திட்டி சரமாரியாக தாக்கினர். மேலும் பேக்கரி கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி இனிமேல் இங்கு கடை நடத்தினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதையடுத்து ராஜீவன் நடந்த சம்பவங்களை தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேக்கரி கடையை சூறையாடிய சக்திவேல் மற்றும் பிரகாசை தேடி வருகிறார்கள்.
Next Story






