என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு கண் கண்ணாடியை தொல். திருமாவளவன் எம்.பி. வழங்கிய போது எடுத்தபடம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் அருகே கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் முகாமை துவக்கிவைத்து பேசியதாவது:
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஒரு விழிப்புணர்வுக்கான இயக்கமாகும். இது ஒரு நாள் மட்டும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக நடத்தப்படும் முகாம் அல்லா. நோய் வருவதற்கு முன் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வாகும்.
தொற்று நோய் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவ தற்காகவே சுகாதாரத்திருவிழா, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே போன்ற முகாம்கள் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறுகிறது.
நோய் வந்த பிறகு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வதை விட நோய் தொற்றாமல் முன் கூட்டியே கண்டறிந்தால் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழலாம். விபத்து நடக்காமல் கவனமாக இருப்பதைப்போல நோய் தொற்றாமல் இருக்கவும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு தேவை.
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் பொழுது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை முறையாக உண்ண வேண்டும். இதனை முறையாக கடைபிடிக்காவிட்டால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நோய் வரும் முன்பும், நோய் வந்த பின்பும் மருத்துவர் கூறும் அறிவுரைகளை தவறாது சரியான கால அளவுகளில் பின்பற்ற வேண்டும். இதனால் நோய் வந்த பின்பும் நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும், தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் இக்கையேடுகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற விழிப்புணர்வு முகாமை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றார்.
பின்னர் அவர், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துப் பெட்டகம், பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி, ரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ், தொழு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story






