search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொழிற்சாலைகளை கொண்டுவர புதிய தொழில் கொள்கை- சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    புதுவையில் தொழிற்சாலைகளை கொண்டுவர புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என சட்டசபையில் சிவா வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதிய அரசாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். மத்திய அரசு புதுவைக்கு 
    ரூ.ஆயிரத்து 729 கோடி நிதியை ஒதுக்கியது. அதற்குமேல் மத்திய அரசு நிதி தரப்போவதில்லை. மத்திய அரசின் துணைத்திட்டங்கள் மூலம் நிதி பெற முடியும். 

    எனவே முழுமையான பட்ஜெட்டையே தற்போது தாக்கல் செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் படவில்லை. 

    தற்போது இரட்டை என்ஜினில் அரசு இயங்குவதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். 

    ஆனால் இரட்டை என்ஜினும் எதிரெதிர் திசையில் இயங்குவதால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது. புதுவையில் உள்ள 19 வாரியங்கள் இயங்குகிறதா? என தெரியவில்லை. அந்த வாரியங்களில் பணிபுரியும் 6 ஆயிரத்து 500 ஊழியர்கள் 20 முதல் 70 மாதம் வரை சம்பளமின்றி உள்ளனர். 

    தி.மு.க. ஆட்சியில் புதுவையில் சர்க்கரை ஆலை கொண்டு வரப்பட்டது. இந்த ஆலை தற்போது மூடிக்கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் 170 ஆலைகளை புனரமைத்து திறந்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு தேவைப்படும் எத்தனால் தயாரிக்க இந்த ஆலைகளை திறந்துள்ளனர். 

    அதேபோல நாமும் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கலாம். பஞ்சாலை களையும் புனரமைத்து திறக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என கூறியதை நம்பி மக்கள் வாக்களித்தனர். 

    மத்திய அரசில் இருந்து வாரந்தோறும் அமைச்சர்கள் வருகின்றனர். ஆனால் புதுவைக்கான ஒரு திட்டத்தைக்கூட அறிவிப்பதில்லை. 

    இன்றையதினம் மத்திய உள்துறை மந்திரி, யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தை நேரடி யாக நாங்களே செயல் படுத்துவோம் என கூறி யுள்ளார். 

    அப்படியென்றால் உங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது? அதை மறந்துவிட்டீர்களா? புதுவை அரசு கடந்த காலத்தில் செயல்படுத்திய காப்பீடு திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பிரதமரின் காப்பீடு திட்ட மாக மாற்றிய பிறகு பயனற்று போய்விட்டது. காப்பீடு அட்டையை ஜிப்மர் மருத்துவமனை கூட ஏற்பதில்லை. 

    எனவே இதை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் முடிவு செய்ய வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் அங்கு இடஒதுக்கீடு கோர முடியாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழிற் சாலைகளை வரவேற்பதாக தொடர்ந்து அரசு கூறி வருகிறது. 

    கடந்த 10 ஆண்டுகளிலும், புதிய ஆட்சியின் 10 மாதத்திலும் ஒரு தொழிற்சாலையாவது வந்துள்ளதா? புதிய தொழிற்சாலைக்கு என்ன சலுகை தர போகிறீர்கள்? புதிய தொழில்கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். 

    சிறப்புக்கூறு நிதியை அரசு முழுமையாக செயல் படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினை பூதாகரமாக உருவாகி வருகிறது. இதையும் தீர்க்க வேண்டும். மத்திய அரசோடு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×