என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
கொம்பாக்கத்தில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மலா (வயது 53 ) இவர் கொம்பாக்கம் நடுத்தெருவில் செல்லதுரை மனைவி ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஐஸ்கிரீம் கோன் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார்.
இந்த நிறுவனத்தில் அந்த இடத்தின் உரிமையாளரின் மகன் ராஜ் என்பவரும் பங்குதாரராக இருந்து வந்தார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி செய்யாமல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள பொருட்களை யாரோ திருடிச் செல்வதாக தகவல் அறிந்த நிர்மலா தனது கணவர் ராஜேந்திரனுடன் நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது இடத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி அவரது கணவர் செல்லதுரை மற்றும் அவர்களது மகன் ராஜ் ஆகிய 3 பேரும் நிறுவனத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி ராஜேந்திரனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற நிர்மலாவையும் அவர்கள் தாக்கி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நிர்மலா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
புதுவை கோரிமேடு சொக்கநாதன் பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 63) இவர் தனது 2 மகள்களுடன் அங்குள்ள கோவில் நிலத்தில் வசித்து வருகிறார்கள்.
இதுபோல் கஸ்தூரியின் உறவினர் முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி, அரங்கநாயகி உள்ளிட்ட சிலரும் அங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் வேப்பமரகிளைகளை வெட்டி அதனை கஸ்தூரி வீட்டு முன்பு கொட்டி அரங்கநாயகி மற்றும் தியாகு ஆகியோர் பிரச்சனை செய்து வந்தனர்.
இது சம்பந்தமாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் கஸ்தூரியின் மகள்கள் இது பற்றி புகார் தெரிவிக்க கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது வீட்டில் கஸ்தூரி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் கஸ்தூரியின் உறவினர்கள் முருகேசன் அவர்களது மகள் இந்துமதி அவரது கணவர் சின்னக்கண்ணு உள்ளிட்ட சிலர் கஸ்தூரியிடம் தகராறு செய்து அவரை கத்தியாலும், இரும்பு பைபாலும் தாக்கினர். இதில் காயமடைந்த கஸ்தூரி கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






