என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வியாபார நிறுவனங்களிடம் வாகன கட்டணம் வசூலிக்க வேண்டும்-அன்பழகன் வலியுறுத்தல்
பார்க்கிங் வசதி இல்லாத நிறுவனங்களிடம் வாகன கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை நகர பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடும் அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது தவறான ஒன்றாகும்.
நகர பகுதியின் தற்போதைய சாலை உட்கட்ட அமைப்பில் உள்ள குளறுபடிகளால் போக்கு வரத்து நெரிசலில் மக்கள் தினந்தோறும் அல்லல்படுகின்றனர். இதன் மூலம் தினசரி சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். சாலை ஓரங்களில் நடைபாதை சிறு கடைகள் வைத்துள்ளவர்கள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவர்.
கேளிக்கை வரி, கேபிள் டி.வி. வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக
வளாகத்தில் உள்ள கடைகள், நகர்ப்புற வளர்ச்சி வரி, உள்ளிட்ட பல வரிகள் மூலம் திரட்டப்படுகின்ற வரியை முறைப்படுத்தி வசூலித்தாலே நகராட்சிக்கு அதிகப்படியான வரியின் மூலம் நிதி கிடைக்கும். இதில் நகராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
தற்போது தனியார் பள்ளிகளிடம் சொத்து வரி, உள்ளாட்சி நிர்வாகம் வசூலிப்பது இல்லை. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் அமல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவில் வருவாய் வரும். பல தனியார், வர்த்தக வியாபார நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருமண மண்டபங்கள், ஒட்டல்கள், போதிய பார்க்கிங் வசதியின்றி நடத்த அனுமதி வழங்குவதால், அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன.
சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, அந்தந்த வர்த்தக, வியாபார நிறுவனகளிடமிருந்து அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம். காலத்திற்கேற்ப வரி வசூலில் நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். வருவாய்க்காக, மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். எனவே, மக்களை பாதிக்கும் புதுவை நகராட்சியின் வாகன நிறுத்தம் கட்டண வசூல் உத்தரவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
Next Story






