என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தொகுதி மேம்பாட்டு நிதி-சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தொகுதி மேம்பாட்டு நிதியை முதலியார்பேட்டை தொகுதிக்கு செலவு செய்ய வேண்டும்- என்று சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு தனது எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் முதலியார்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக செலவு செய்ய வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலியார்பேட்டை தொகுதியில் பல ஆண்டுகளாக மக்களுக்கு அடிப்படை தேவைகளான சாலை வசதி, வடிகால், வாய்க்கால் வசதி, மின் விளக்குகள் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. புதிதாக நகர்கள் உருவாகி உள்ளன. ஆனால், அவற்றுக்கு தேவையான சாலை வசதிகள், வடிகால் வசதிகள், தெருமின் விளக்குகள் செய்து தரப்படாமல் உள்ளது.
தாங்கள் உள்பட 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளீர்கள். நியமன எம்.எல்.ஏ. அவர் விரும்பும் எந்த தொகுதிக்கும் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் இருவரும் ராஜ்பவன் தொகுதியில் வசித்து வந்தாலும், இவர்கள் தங்களுக்கு என்று தொகுதி அலுவலகம் வைத்துக்கொள்ளவில்லை.
தாங்கள் முதலியார் பேட்டை சட்டமன்ற தொகுதியில் வசித்து வருகிறீர்கள். மேலும் அரசின் சார்பில் புதுவை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசின் நிதியில் முதலியார்பேட்டை தொகுதியில் அலுவலகம் வைத்துள்ளீர்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் மக்களுக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதும் பயனுள்ளதாக மாற்றி வருகிறேன். மற்ற 2 நியமன எம்.எல்-.ஏ.க்களை காட்டிலும் தொகுதியில் அலுவலகத்தோடு தாங்கள் இருப்பதால் தங்களின் முழு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.1.10 கோடியை முதலியார்பேட்டை தொகுதிக்கு செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






