என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த டாக்டர் வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
டாக்டர் வீட்டில் நகை கொள்ளை
புதுவையில் டாக்டர் வீட்டில் நகை கொள்ளை நடந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சவரிராயலு வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 35). பிம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவியும் டாக்டர் ஆவார். ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல தர்மராஜின் மனைவி பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றார்.
அப்போது அதில் வைத்திருந்த 3 பவுன் கம்மல் ஜிமிக்கி, 4 பவுன் நெக்லஸ், 3 பவுன் வளையல், கால் பவுன் டாலர் உட்பட 11 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ் மற்றும் அவரது மனைவி இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்&இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே தர்மராஜியின் வீட்டிற்கு யார்-யார்? வந்து சென்றார்கள் என மருத்துவ தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது 4 நாட்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த உறவினர் வெங்கடேஷ் வந்து தங்கி சென்றது தெரியவந்தது. தற்போது வெங்கடேஷ் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பெட்ரோல் பங்கில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேஷிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனிடையே, அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது திடீரென அதில் பணம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை உரிய முறையில் போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். அவர் அடகு கடையில் வைத்த நகைகள் மீட்கப்பட்டது.
Next Story






