என் மலர்
உள்ளூர் செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடல்.
திருமால்பூரில் ரெயில் தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் பிணம்
திருமால்பூரில் ரெயில் தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டுக்கு செல்லும் தண்ட வாளத்தில் இன்று காலை ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் யாரேனும் அவரை கடத்தி வந்து எரித்து கொலை செய்து உடலை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணம், திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்டவரின் விவரம் தெரிந்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். ரெயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






