search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
    X
    வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த பொதுமக்கள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 185 வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 185 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் உள்ளது. இதில் 72 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 278 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல் தியாகதுருகம், சங்கராபுரம், மணலூர்பேட்டை, சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகள் உள்ளது. இதில் 81 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 69 வார்டுகளில் 244 பேர் போட்டியிடுகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி 5 பேரூராட்சிகளில் 141 வார்டுகளுக்கு 522 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு லட்சத்து 71,841 வாக்காளர்கள் உள்ளனர்.

    இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் 185 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

    இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க வந்தனர்.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான காய்ச்சல் பரிசோதனை செய்தல் கிருமி நாசினிகள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு உடைகளுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    Next Story
    ×