என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியானர்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சமன்ஸ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் மற்றும் அண்ணி இறந்து விட்டதால் அவர்களது மகன் சதீஷ்(27) என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார். சதீஷ் பிளம்பர் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்லாமல் அவர் மது குடித்து வந்தார்.
இதையடுத்து மது பழக்கத்தை மறக்க சதீசை திருக்கோவிலூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து சமன்ஸ் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் சதீஷ் அந்த மையத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
இந்தநிலையில் மேரி உழவர்கரையில் உள்ள ஒரு மதுகடைக்கு சதீஷ் மது குடிக்க சென்றார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுக்கடை அருகிலேயே சதீஷ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது வளர்ப்பு தாய் சமன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார். அப்போது சதீஷ் இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து சமன்ஸ் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






