என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் ஓட்டு  (கோப்பு படம்)
    X
    தபால் ஓட்டு (கோப்பு படம்)

    சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் தபால் ஓட்டு வசதி கேட்கும் முதியவர்கள்- தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யுமா?

    வயதானவர்களை பொறுத்தவரை மூட்டு வலி, நடக்க இயலாமை ஆகிய காரணங்களால் வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிப்பது இயலாத காரியம்.

    சென்னை:

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை தவறாமல் செய்யுங்கள் என்று அரசு வலியுறுத்துகிறது.

    வயதான முதியவர்கள் பலரிடம் வாக்களிக்கும் ஆர்வம் இருக்கிறது. அதற்கான வசதி செய்து கொடுக்காததால் பலர் வாக்களிக்க இயலாமல் இருக்கிறார்கள்.

    சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தபால் ஓட்டு போடும் வசதி அல்லது வீட்டுக்கே நேரில் வந்து வாக்குச் சீட்டுகளை சேகரித்து செல்லும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    வயதானவர்களை பொறுத்தவரை மூட்டு வலி, நடக்க இயலாமை ஆகிய காரணங்களால் வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிப்பது இயலாத காரியம். அதிலும் பலர் கொரோனா தாக்கத்துக்கு பிறகு உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    அதே போல் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களில் பலரும் வாக்களிக்க இயலாமல் போகிறது.

    சட்டமன்ற தேர்தலின் போது தபால் வாக்கு, அல்லது வீடுகளுக்கு நேரில் வந்து வாக்குச் சீட்டை சேகரிக்கும் நடைமுறை அனுமதிக்கப்பட்டது. அதே போல் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலிலும் எதிர் பார்க்கிறார்கள்.

    சென்னையில் சுமார் 5 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்களர்களாக இருக்கிறார்கள். தாம்பரம் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சராசரியாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எனவே தபால் வாக்கு வசதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

    30 முதியோர்களுடன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் லலிதா என்ற 80 வயது பெண் கூறும்போது, “வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கிறோம். எங்கள் இல்லத்திலேயே நாங்கள் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும்” என்றார்.

    மாலதிமணி என்ற 84 வயது மூதாட்டி கூறும் போது, “என்னால் நடந்து சென்று வாக்குச் சாவடியில் காத்து நின்று வாக்களிக்க இயலாது. அரசு மாற்று வழி செய்து தந்தால் நிச்சயம் வாக்களிப்பேன்” என்றார்.

    இதையும் படியுங்கள்... வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா தீவிரம்- பரிசு கூப்பன், பொருட்கள் வினியோகம்

    Next Story
    ×